உயிர்த்த ஞாயிறு மனிதப்படுகொலைக்கு கண்டனம்! உண்மைநிலை கண்டறிய பொதுநலவாயநாடுகளின் விசாரணை தேவை:நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Church Bombing

கொல்லப்பட்டோரில் மூன்றில் இரண்டு பகுதி தமிழ்க் கிறிஸ்தவர்கள் என்பதும் மிகுதி மூன்றில் ஒரு பகுதியினரே சிங்களக் கிறிஸ்தவர்களும், வெளிநாட்டவர்கள்: புள்ளிவிபரங்கள்

இக்குண்டுத் தாக்குதல் நிகழ இருப்பது தொடர்பாக இலங்கை அரசிற்கு இந்திய அரசு உத்தியோகபூர்வமாக முன்கூட்டியே அறிவித்திருந்தது என செய்திகள் வெளிவந்துள்ளன”

— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

NEW YORK, UNITED STATES OF AMERICA, April 23, 2019 /EINPresswire.com/ —

இலங்கைத்தீவில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019) நடைபெற்ற குண்டு வெடிப்புத்தாக்குதலின் விளைவான மனிதப்படுகொலைகளை வன்மையாகக் கண்டனம் செய்வதோடு, கொல்லப்பட்டவர்களதும், காயமடைந்தவர்களதும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இதேவேளை காயம் அடைந்த 500 பேருக்கு மேற்பட்டவர்களும் விரைவில் சுகமடைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறோம்.

இத் தாக்குதல்கள் குறித்து அறியக் கிடைக்கும் செய்திகளின்படி, 8 வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டுத் தாக்குதல்களின் போது 290 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர், 500 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர். இவற்றில் 4 இடங்கள் கிறிஸ்தவ புனித தேவாலயங்களும், 4 இடங்கள் ஐந்து நட்சத்திர உல்லாச விடுதிகளாகவும் உள்ளன. உல்லாச விடுதிகளில் நிகழ்ந்த குண்டுத் தாக்குதல்களின் போது 33 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் 5 பேர் இந்தியர்களும் மிகுதி பேர் மேற்கு நாட்டவர்களுமாவர். மேலும் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதனை பொலீஸார் சோதனையிடச் சென்ற போது குண்டுதாரிகள் அதனை வெடிக்க வைத்ததில் 3 பொலீஸாரும் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதல் நிகழ்ந்த சிலமணி நேரத்தின் பின் ஊடகங்களுக்குத் தகவல் வெளியிட்ட பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரும், ஊடகத்துறை அமைச்சருமான ருவான் விஜெயவர்த்தன பாதுகாப்பு அமைச்சுக்கு குண்டுத் தாக்குதல்கள் நடக்க இருப்பது பற்றி எச்சரிக்கைத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்ததாகவும், அதனைத் தாம் போலியானது எனக் கருதி அது தொடர்பாக தகவல்களை உறுதிப்படுத்துவற்கு இடையில் இந்த குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துவிட்டன என்றும் தெரிவித்துள்ளார்.

'புலனாய்வுத் துறையினரிடம் முன்கூட்டியே தகவல்கள் இருந்தும், அப்படி இருக்கையில் இச்சம்பவம் எப்படி நடந்தது என்பதை தாங்கிக் கொள்ள முடியாது இருக்கிறது' என்று அமைச்சர் ஹென்ரி பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் 'ஏற்கனவே எச்சரிக்கை கிடைத்திருந்தது. அவ் எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டிருந்ததால் இவ்விபரீதம் ஏற்பட்டது. போலியானது என்று புறக்கணிக்கப்பட்ட முன்னெச்சரிக்கையே உண்மையானதாக்கியது. இது குறித்து விசாரணை வேண்டும். உரிய வகையில் கடமையை நிறைவேற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அமைச்சர் ஹென்ரி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிரதமராகிய தமக்கும் தமது அமைச்சர்களுக்கும் இத்தகவல்கள் இறுதிவரை தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியை நோக்கி விரலை நீட்டும் வகையில் காட்டமாகப் பேசியுள்ளார். 'நடக்கவிருந்த தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும் எனக்கோ எனது அமைச்சர்களுக்கோ இது பற்றி தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை' இந்த விடயம் பாரதூரமானது. பொறுப்பு கூறப்படவேண்டிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று மேற்படி நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

கிறிஸ்தவ புனித ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டுத் தாக்குல்கள் நிகழ்த்தப்பட இருந்ததை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனைத் தடுப்பதற்குத் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எதனையும் அவர் மேற்கொள்ளாததுடன் அன்றைய தினம் பார்த்து அவர் வழிபாட்டிற்காகவும், தனது நண்பர் ஒருவரை சிங்கப்பூரில் சந்திப்பதற்காகவும் சென்றமை ஒரு பொறுப்பற்ற நடவடிக்கையாக அமைவது மட்டுமன்றி பல சந்தேகங்களுக்கும் வழிவகுக்கிறது.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கிடைத்த தகவல்கள் அனைத்தும் பெரும்பான்மையாக தமிழ்க் கிறிஸ்தவர்களே கொல்லப்பட உள்ளார்கள் என்பதும் அதில் கொல்லப்படக்கூடிய ஏனையோர் சிறிதளவிலான சிங்களக் கிறிஸ்தவர்களே என்பதும் இத்தாக்குதலில் ஒரு பௌத்த குடிமகன்கூட கொல்லப்பட மாட்டார் என்பது உறுதியான நிலையில் இத்தாக்குதல் நடப்பதை சிறிசேன அனுசரித்து நடந்து கொண்டார் என்று கருதவும் இடமுண்டு. கொல்லப்பட்டோரில் மூன்றில் இரண்டு பகுதியினர் தமிழ்க் கிறிஸ்தவர்கள் என்பதும் மிகுதி மூன்றில் ஒரு பகுதியினரே சிங்களக் கிறிஸ்தவர்களும், வெளிநாட்டவர்கள் என்பதையும் கொல்லப்பட்டோரின் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இந்த வகையில் தமிழ்க் கிறிஸ்தவர்களும், சிங்களக் கிறிஸ்தவர்களும் கொல்லப்படுவதற்கு ஏதுவான குண்டுத் தாக்குதலை நடக்க அனுமதிப்பதன் மூலம் தமிழ்-முஸ்லிம்-கிறிஸ்தவ இனப்பூசல்கள் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி விரும்பியுள்ளார் என்ற ஐயத்துக்கும் இங்கு இடமுண்டு. தனது சொந்த அரசியல் நலன்களுக்காக இத்தகைய இனப்பூசல்களுக்கு வழிவகுக்கத் தகுந்த இக்குண்டுத் தாக்குதல்களை அவர் அனுமதித்துள்ளாரா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

இக்குண்டுத் தாக்குதல் நிகழ இருப்பது தொடர்பாக இலங்கை அரசிற்கு இந்திய அரசு உத்தியோகபூர்வமாக முன்கூட்டியே அறிவித்திருந்தது எனவும் இக்குண்டு தாக்குதல்களில் ஈடுபட இருந்தவர்களின் பெயர் விபரங்கள்கூட வழங்கப்பட்டிருந்தன எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் பாதுகாப்பு அமைச்சும், பொலீஸ் பிரிவும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளது. முன்கூட்டியே பெயர் விபரங்களுடன் பாதுகாப்பு அமைச்;சுக்கு தவல்கள் தெரிந்திருந்தும் ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்டு நடவடிக்கையில் ஈடுபடாமல் விட்டமை பெரும் ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான இத்தாக்குதல்கள் நடந்த சில மணி நேரங்களின் பின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரூவான் விஜெயவர்த்தன, 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்ததும் கலைக்கப்பட்ட ஓர் இயக்கமே இத்தாக்குதலை நடாத்தியதாகக் கூறியுள்ளார். யுத்த காலகட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட துணைப்படையான 'ஜிகாத்' அமைப்பானது யுத்தம் முடிந்த பின் கலைக்கப்பட்ட நிலையில் அந்த அமைப்பில் இருந்த ஒரு பகுதியினர் 'தேசிய தவத் ஜமாத்' என்னும் அமைப்பை முஹம்மது தாயீத் முஹம்மது சஹாரான் என்பவர் தலைமையில் உருவாக்கியதாகவும் அந்த அமைப்பே இத்தாக்குதல்களை நடாத்தியதாகவும் புலனாய்வு அதிகாரிகள் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாக்குதலை மேற்படி இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் செய்துள்ளன என்ற பின்னணியில் முஸ்லிம்கள் மீது தமிழ் மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கோபத்தை ஊட்டும் உள்நோக்கம் அவரது கருத்தின் ஊடாக வெளிவந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.

இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராயினும் அவர்களும், அவர்களுக்கு உடந்தையான ஆட்சியாளர்களும், பாதுகாப்புத்துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். சிறிலங்காவின் நீதித்துறை இனத்துவரீதியாகவும், மதரீதியாகவும்

போதிய சுயாதீனமற்றதாக இருக்கும் நிலையில், தாக்குதல் குறித்து தகவல்கள் முன்கூட்டியே தெரிந்திருந்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத பின்னணியில், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அமைப்புடன் அரசாங்கத்தின் அமைச்சர்களும், கிழக்கு மாகாண ஆளுனரும் தொடர்புகளைப் பேணிக் கொண்டார்கள் என்று குற்றம் சாட்டப்படுமொரு சூழலில், ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கிடையே பனிப்போர் நடாத்திவரும் வேளையில் உள்நாட்டு விசாரணையின் ஊடாக உண்மை வெளிப்படுவதும், நீதி நிலைநிறுத்துப்படுவதும் சாத்தியமற்றது.

ஆதலால் இத் தாக்குதலின் பின்னணிகளை ஆராய உள்நாட்டு விசாரணையல்லாமல் சர்வதேச நீதியாளர்களினால் இவ்விசாரணை நடாத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இலங்கையும் அங்கம் வகிக்கும் பொதுநலவாயநாடுகள் அமைப்பு இது தொடர்பான நீதி விசாரணையை முன்னெடுத்து மக்களுக்கு எழுந்திருக்கக்கூடிய ஐயங்களைப் போக்கும் வகையில் செயற்படுவதற்கான தேவை எழுந்துள்ளது. அனைத்து குற்றவாளிகளும் கடுமையாக தண்டிக்கப்படுவதன் ஊடாகவே நீதியினை நிலை நிறுத்த முடியும்.

விசுவநாதன் ருத்திரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Twitter: @TGTE_PMO

Email: r.thave@tgte.org

Web: www.tgte.org

Web: www.tgte-us.org

English Press Release:

Commonwealth Urged to Investigate Sri Lanka’s Easter Sunday Church Bombings: TGTE

Sri Lankan Law Enforcement & Judiciary are not ethnically or religiously neutral – Law Enforcement was notified about the possibility of attack beforehand.

https://world.einnews.com/pr_news/482930367/commonwealth-urged-to-investigate-sri-lanka-s-easter-sunday-church-bombings-tgte

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter


Source: EIN Presswire